திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ஜவ்வாது மலைத் தொடரில் அமைந்துள்ளது நாயக்கனேரி மலைக்கிராமம். இந்த கிராம ஊராட்சியில் பனங்காட்டேரி மற்றும் காமனூர் தட்டு என்ற மேலும் இரண்டு மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த நாயக்கனேரி மலைக்கிராம ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி காமனூர் தட்டு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் இவரது மனைவி இந்துமதி என்பவரைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய முற்படும் போது நாயக்கனேரி மலைவாழ் மக்கள் இந்துமதியைத் தடுத்து நிறுத்தி அவருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருந்த போதிலும் இந்துமதி வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் கடைசி நேரத்தில் ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்டியலின பெண் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததால் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மலைக்கிராம மக்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமலும் மற்றும் ஊராட்சியில் உள்ள 9 வார்டு உறுப்பினர் பதவிக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்தனர்.
இதனால் இந்துமதி போட்டியின்றி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மலைக்கிராம மக்கள் இந்துமதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.
இதனால் இந்துமதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் மலைக்கிராமத்தை விட்டு வெளியேறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். மேலும் இந்துமதி பாண்டியனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட காமனூர்தட்டு பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை ஊரை விட்டுத் தள்ளி வைத்து ஊர் பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளனர்.