திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழ்நாடு- ஆந்திரா எல்லைப்பகுதியான புல்லூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலாற்று தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வெளியேறும் தருவாயில் உள்ளது. கடந்த சில மாதங்களாக பாலாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அதிகளவு மழை பொழிந்ததால் இந்தாண்டு பாலாற்றிற்கு நீர் வரத்து உள்ளது. இது பாலாறு பாசன விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய விவசாயிகள், "இந்தாண்டு எதிர்பாராத விதமாக பாலாற்று நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்துவருவதால் பாலாற்றில் தண்ணீர் சற்று வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் ஆந்திரப் பகுதிகளில் மழை பெய்துவந்தாலும், தற்போதுதான் தமிழ்நாட்டு எல்லையில் தண்ணீர் வந்துள்ளது.
பாலாறு ஆந்திர மாநிலத்தில் 40 கி.மீ மட்டுமே ஓடுகிறது. அம்மாநில அரசு பாலாற்றில் 14 தடுப்பணைகளை கட்டியுள்ளது. ஆகையால் இருமாதங்களுக்கு முன்னரே வரவேண்டிய நீர் தற்போதுதான் வந்துள்ளது. மேலும், தமிழ்நாடு, ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் ஆந்திர அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழு அடியாக இருந்த தடுப்பணையை 14 அடியாக உயர்த்திக்கட்டியுள்ளது.