திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரில் வசித்து வருபவர் பிரபல கள்ளச்சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் கடந்த பல ஆண்டுகளாக கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். கள்ளச்சாராய வழக்கில் பல முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தும், மிக எளிதில் வெளியில் வந்து விடுகிறார்.
இதனால் அப்பகுதியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாமல், சமீப காலமாக காவல் துறையினர் திணறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், நள்ளிரவில் மகேஸ்வரி வீட்டைச் சுற்றி வளைத்தனர். அப்போது கள்ளச்சாராய கும்பலை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, ஏற்பட்ட தாக்குதலில் பெண் காவலர் சூர்யா என்பவர் காயமடைந்தார்.
அதன்பின் மகேஸ்வரி, சீனிவாசன், காவியா உட்பட ஏழு பேரைக் கைது செய்த காவல் துறையினர், மகேஸ்வரியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்ளைப் பறிமுதல் செய்தனர்.