திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டுப்புடவை வியாபாரியான கனகராஜ் என்பவரிடம் காரை வழிமறித்த கும்பல் ஒன்று காவல் துறையினர் எனக் கூறி வழிப்பறி செய்துவிட்டு தப்பி ஓடியதாக கனகராஜ் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், ஆம்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறிக் கொள்ளை நடைபெற்றதாகக் கூறப்படும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட கார், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருப்பதாகத் தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அக்காரை துரத்திப் பிடிக்க முயன்றபோது காரில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரை வேகமாக இயக்கி ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
உடனடியாக காரில் இருந்தவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்த காவல் துறையினர் காரை சோதனை மேற்கொண்டதில் காரில் இருந்த இரண்டு பைகளில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் இருப்பது கண்டறியப்பட்டது.