திருப்பத்தூர்: திமுக, அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் சேவை செய்வதுதான் தனது கடமை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் நிலோபர் கபீல், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சென்னையில் இருந்து வாணியம்பாடியிலுள்ள வீட்டுக்குச் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது," நான் கடந்த 2006ஆம் ஆண்டு ஜமாத் சார்பாக நகர மன்றத் தலைவராக வெற்றிபெற்றேன். கடந்த 2016ஆம் ஆண்டு என்னுடைய உழைப்பை பார்த்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எனக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கினார்.
அதிமுக ஆட்சி மீது எந்த குறையும் இல்லை; ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நல்ல முறையில் ஆட்சியை நடத்தினார்கள். ஆனால் நம்முடைய திருப்பத்தூர் மாவட்டத்தில் எத்தனையோ குறைகள் உள்ளன.
மாவட்ட செயலாளர் என்னை அணுகவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவுக்கு நான் விசுவாசியாக இருந்தேன். கட்சிக்காக 20 ஆண்டுகள் நான் உழைத்தேன். வாணியம்பாடி நகரமன்றத் தலைவராக அதிமுக கட்சியின் மூலம் வெற்றி பெற்றேன்.
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல்! என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக, அமைச்சர் வீரமணி செயல்பட்டார். கிராமப் பகுதிகளில் நான் நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அனைத்தையும் செய்து முடித்தேன். அதனால்தான் அதிமுக வேட்பாளர் செந்தில் குமார் வெற்றி பெற்றார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த ஊழியர் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று நகரச் செயலாளர் கூறினார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. மனு தாக்கல் செய்யும்போது எனக்கு அழைப்பிதழ் தரவில்லை.
நானே வேட்புமனுத் தாக்கலுக்குச் சென்றேன். ஆனால் முன்னாள் அமைச்சர் வீரமணி எதற்காக அந்த அம்மாவை அழைத்து வந்தீர்கள் என வேட்பாளரின் தந்தை கோபாலிடம் கேட்டார். செந்தில்குமார் வெற்றி பெற வேண்டும் என்ற நான் பல இடங்களுக்குச் சென்று வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகள் போய்விட்டன. ஆனால் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும்தான் வெற்றி கிடைத்தது. ஏனென்றால் தொகுதியில் நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியதால்தான் அதிமுக வெற்றி பெற்றது.
ஆனால் தொகுதியில் எனக்கு மரியாதை அளிக்கவில்லை. அதனால் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என தலைமைக்கு கடிதம் எழுதினேன். 20 ஆண்டுகளாக கட்சியில் இருந்தேன். அதற்கு முன் நான் சமூக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.
கடந்த 13ஆம் தேதி எனது தாய் இறந்துவிட்டால் துக்கம் தாங்கவில்லை. இதற்கிடையில் எனது அக்கா 20ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். அதற்குப் பிறகு என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக, தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தேன். தலைமை என்னை நீக்கிவிட்டது என்று கடிதம் அனுப்புகிறது.
பிரகாசம் என்பவர் நகர மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் பாஜகவைச் சேர்ந்தவர் அவருக்கு நான்தான் சீட்டு வாங்கி கொடுத்தேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறுவது தப்பில்லை.
பிரகாசம் வாங்கிய பணம் அனைத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இதனை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக உள்ளேன். ஒரு நாள் என்னிடம் போன் செய்து அழுதார். கடந்த ஏப்ரல் மாதம் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார்.
இவர் மீது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். எந்தக் கட்சியாக இருந்தாலும் சேவை செய்வதுதான் எனது கடமை. அது அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி.
அந்தக் கட்சியில் இருக்கும் வரை நான் விசுவாசமாக இருப்பேன். எந்தக் கட்சியாக இருந்தாலும், நான் விசுவாசமாக உழைப்பேன்" என்றார்.
இதையும் படிங்க:'பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பணியில் ஈடுபடுவீர்' - திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு