திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ. 104.1 கோடி மதிப்பீட்டில் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவிவி கன்சல்டன்ஸியை சேர்ந்த வீர வெங்கட விஜயன் என்பவற்கு ஒப்பந்தம் விடப்பட்டு தொடங்கப்பட்டது.
திருப்பத்தூர் நகரம் 9.90 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 36 வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு 2016ஆம் வருடத்தின்படி மக்கள்தொகையானது 85 ஆயிரத்து 326 ஆக உள்ளது. இது 2031ஆம் வருடம் 99 ஆயிரத்து 389 எனவும், 2046ஆம் வருடம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 851 எனவும் கணக்கிடப்பட்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ். நகரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு 8.130 கிலோ மீட்டர் நீளத்துக்கு 150 மில்லி மீட்டர் முதல் 500 மில்லி மீட்டர் விட்டமுள்ள வார்ப்பு இரும்பு குழாய்கள் மூலம் துணை கழிவு நீர் உந்து நிலையம் மற்றும் பிரதான கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர், ஜார்ஜ் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.
இந்தக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் இடைநிலை மக்கள் தொகையை கணக்கில் கொண்டு 11.43 எம்.எல்.டி. கழிவுநீரை சுத்திகரிக்க செயலாக்கப்பட்ட சக்தி முறை தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப்பணிகள் அனைத்தும் நவம்பர் 30, 2020இல் குடிநீர் வடிகால் வாரியத்தால் முடிக்கப்பட்டு டிசம்பர் 1, 2020 முதல் சோதனை ஓட்டத்தில் இருந்தன.