திருப்பத்தூர்:வாணியம்பாடியில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத ஆவண எழுத்தர் அலுவலகத்துக்கு சீல் வைத்து மாவட்ட கலால் துணை ஆட்சியர் சரஸ்வதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகமாகவுள்ளதால், கடந்த 2 நாள்களில் மட்டும் 7 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட முழுவதும் தொற்றைத் தடுக்க தீவிரப் பணியில் ஈடுபட வேண்டும் என, அரசு அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகம் முன்பாகவுள்ள ஆவண எழுத்தர் அலுவலகத்தில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டம் நெரிசலாக காணப்பட்டது. அவ்வழியாக ஆய்வு மேற்கொள்ள சென்ற திருப்பத்தூர் மாவட்ட கலால் துணை ஆட்சியர் சரஸ்வதி, இதனைக் கண்டு ஆவண எழுத்தர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அலுவலகத்தில் இருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தி, எழுத்தர் அலுவலகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் சிவபிரகாசம் தலைமையிலான வருவாய் துறையினர் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: ஆறு மாதத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார்: எம்.பி., கதிர் ஆனந்த்