திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அருகே தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு, தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சேகர், ஆய்வு மாணவர்கள் சரவணன், தரணிதரன், சந்தோஷ் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அவர்கள், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால இடங்கைத் தளக் கல்வெட்டை கண்டுபிடித்தனர்.
இது குறித்து முனைவர் பிரபு பேசுகையில், "ஆண்டியப்பனூர் நீர்த்தேக்கத்தின் அருகே தனியாருக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் கல்வெட்டு ஒன்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கே சென்று கள ஆய்வு மேற்கொண்டோம். அங்கே நிலத்திற்குள் புதைந்த நிலையில் ‘சித்திரமேழிக் கல்வெட்டு’ இருப்பதை உறுதிசெய்தோம். புதையுண்ட நிலையில் உள்ள கல்வெட்டினை நிலத்தின் உரிமையாளர் சிமெண்ட் கலவையால் பூசிவைத்து வழிபட்டுவருகின்றனர்.
அவர்களின் ஒத்துழைப்போடு கல்வெட்டில் இருந்த சிமெண்ட் கலவை அகற்றப்பட்டு சுத்தம்செய்யப்பட்டது. கல்வெட்டு 3 அடி அகலமும் 6 ½ அடி நீளமும் கொண்டதாக உள்ளது. கல்வெட்டின் மேற்புறம் திருமகள் உருவம் பொறிக்கப்பட்டு, பக்கவாட்டில் இரண்டு முழு உருவ யானைகள் துதிக்கையில் கலசநீரினை திருமகள் மீது பொழியும் நிலையில் காட்டப்பட்டுள்ளது.
யானைகள் கார் மேகங்களாகவும் திருமகள் பூமாதேவியாகவும் கருதப்படும். இவை வளமைக் குறியீடுகளாகும். யானைகளுக்கு மேல் இரண்டு பக்கங்களிலும் சாமரங்கள் காட்டப்பட்டுள்ளன. கரண்ட மகுடம் அணிந்து பாத பீடத்தின் மீது இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி திருமகள் பொழிவுடன் காட்டப்பட்டுள்ளாள்.
அவளது பாதத்திற்குக் கீழே இரண்டு முக்காலிகள் மீது பூரண கும்பக் கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. அருகே இரண்டு அழகிய குத்து விளக்குகளும், கீழே ஒரு யானை, அங்குசம், முரசு, குரடு, ‘வளரி’ (பூமராங்), உழு கலப்பை, கொடிக்கம்பம் ஆகியவை வடிக்கப்பட்டுள்ளன. இவை போர்ப்படை, உழு படை, தொழில்படை ஆகியனவற்றைக் காட்டுவனவாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாணிபம் செய்யும் குழுவினர் இந்த மூன்று படைகளையும் வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்.