திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை ஒன்றியம் தாமலேரி முத்தூர் ஊராட்சி மன்ற தலைவராகச் சுதா இளங்கோ உள்ளார். துணைத் தலைவராக ராம்குமார் மற்றும் 9 வார்டு உறுப்பினர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இன்று(பிப்.22) ஊராட்சி மன்ற அவசரக் கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் ஈடுபட்ட துணைத்தலைவர் ராம்குமார் தலைவியிடம் தங்கள் ஊருக்கு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பியபோது அது பற்றி அவர் ஏதும் கூறாததால் ஆத்திரமடைந்த ராம்குமார் எங்கள் ஊருக்கு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டாயம் வேண்டும் என்று கூறி திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
மேலும் ,ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவைச் சார்ந்தவர் ஆவார். துணைத்தலைவர் திமுகவைச் சார்ந்தவர் என்பதால் துணைத்தலைவர் எந்த வேலையைச் சொன்னாலும் ஊராட்சி மன்ற தலைவர் தட்டிக் கழிப்பதாகக் கூறப்படுகிறது.