திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மாங்கா தோப்பு, காப்புக்காடு பகுதியில் இருந்து தண்ணீருக்காக மான் குட்டி ஒன்று ஊருக்குள் வந்துள்ளது.
இதனைக் கண்ட அங்கிருந்த நாய்கள் மான் குட்டியைத் துரத்தியுள்ளன. இதனால் அச்சமடைந்த மான் குட்டி, அருகில் இருந்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு ஓடிச் சென்றுள்ளது. அப்போது, சாலையைக் கடக்க முயன்ற மான் குட்டி, எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றில் மோதியுள்ளது.
இதில், படுகாயமடைந்த மான்குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த தகவலறிந்த ஆம்பூர் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், விபத்தில் உயிரிழந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வயதே ஆன மான்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:4 வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!