திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், மக்களை நேரடியாகச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அவர்களுடைய குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கைக்குழந்தையுடன் கதறி அழுதபடி மனு அளித்த பெண்: உடனடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!
திருப்பத்தூர்: குடும்ப அட்டையை வழங்கக்கோரி, மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கைக்குழந்தையுடன் கதறி அழுதப்படி மனு அளிக்கவந்த பெண்ணுக்கு உடனுக்குடன் குடும்ப அட்டையை வழங்க மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டார்.
அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டை அலசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி (24) என்ற பெண் கதறி அழுதபடியே மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தார். தனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள சூழ்நிலையில், தனது கணவர் சங்கர் தன்னை விட்டு சென்றுவிட்டதாகவும், தன்னிடம் இருந்த குடும்ப அட்டையை தனது மாமியார் பிடுங்கிக் கொண்டதால், இரு பெண் குழந்தைகளுக்கு தேவையான உணவை கொடுக்கக்கூட தன்னால் முடியவில்லை எனக் கூறி கதறி அழுதுகொண்டே மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் நிலையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் சிவனருள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அழைத்து, லோகேஸ்வரிக்கு குடும்ப அட்டை வழங்க ஆணையிட்டார். இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயன்பெற்றனர்.