திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், பாலூர் கிராமத்தில் நேற்றிரவு (ஆகஸ்ட் 11) பலத்த காற்றுடன் பெய்த, கனமழை காரணமாக, விவசாய நிலங்களில் செல்லும் மூன்று மின்கம்பங்களில், மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.
இதைக்கண்ட கிராம மக்கள் உடனடியாக வடுக்காத்தப்பட்டியிலுள்ள மின்சாரத்துறை இளநிலை பொறியாளருக்கு தகவல் அளித்துள்ளனர். இருப்பினும் மின் ஊழியர்கள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 12) காலை அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன் என்பவர் மாட்டை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது அவரது மாடு, நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், மின்சாரத்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமாவே இந்த சம்பவம் நடந்துள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.