திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகேவுள்ள தும்பேரி ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மொத்தம் 677 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் சத்துணவு திட்டத்தின் கீழ் 416 மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.
பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக ஸ்ரீவித்யா மற்றும் உதவி அமைப்பாளராக பானுப்பிரியா வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செப்.27) பள்ளியில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவு வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் தலைமை ஆசிரியர் லோகநாதன் சத்துணவு உதவி அமைப்பாளர் பானுப்பிரியா பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்ல கிளம்பியபோது அவர் வைத்திருந்த ஸ்டீல் கேட்டல் வாங்கி சோதனையிட்டார். அப்போது அதில் மாணவர்களுக்கு மதிய உணவு நேரத்தில் வழங்கக்கூடிய முட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து விற்பனைக்காக எடுத்துச் சென்ற முட்டைகளை தலைமை ஆசிரியர் கையும் களவுமாக பிடித்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
இதுகுறித்து சத்துணவு அமைப்பாளர் ஶ்ரீவித்யா கூறியதாவது, தலைமையாசிரியர் லோகநாதன் என்பவர் அடிக்கடி சத்துணவு சமைக்கும் அறைக்கு வந்து சத்துணவு அமைப்பாளர் ஶ்ரீவித்யாவிடம் தவறான வார்த்தையில் பேசியும் தவறாக நடக்க முயன்றதாகவும், அதற்கு தான் ஒத்துழைக்கவில்லை.
இதற்காக தன்னை அடிக்கடி பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் கிராம மக்களில் 10 பேரை திரட்டி தன்னை பணி செய்ய விடாமல் செயல்பட்டு வந்தார். இதுகுறித்து ஏற்கனவே தான் வட்டார வளர்ச்சி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்து அலுவலர்கள் விசாரணை நடத்திய பின்னர் தலைமையாசிரியர் சமையல் அறைக்கு வருவதை தவிர்த்து விட்டார்.
அரசு பள்ளியில் சத்துணவு முட்டைகளை ஊழியர் விற்பனைக்கு எடுத்துச் சென்றதாக புகார் தற்போது தலைமையாசிரியர் தன்னை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சத்துணவு உதவியாளர் பானு என்பவர் மூலம் சத்துணவு முட்டைகளை வெளியே எடுத்துவர சொல்லி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக அவர் கூறினார்.
தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் இடையில் நடைபெறும் இந்த பிரச்சினை, மாணவர்களுக்கு வழங்கக்கூடிய முட்டையில் முடிந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியர் மற்றும் முட்டை விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கஞ்சா செடிகள் வளர்த்த நபர் கைது!