திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா இரண்டாவது அலை தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நடைபெற்று வரும் பணிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி உணவகம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய நிலவரப்படி 652 பேர் கரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் அஹ்ராகாரம் பகுதியில் சித்தா மருத்துவமனை தொடங்கப்பட்டு அங்கும் 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.