திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமாக தேங்காய் மண்டி செயல்பட்டு வருகிறது இந்த மண்டியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் தேங்காய் மூட்டைகளை வாணியம்பாடி கோனாமேடு பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரியில் லோடு ஏற்றுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திம்மாம்பேட்டை பகுதியிலிருந்து சிவபுரி பகுதிக்குச் செல்லும் தேங்காய் லோடு ஏற்ற வாணியம்பாடி கோனாமேடு பகுதியை சேர்ந்த 18 சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் லோடு ஏற்றி வந்த லாரி ஆவாரங்குப்பம் பகுதியில் சென்ற போது, எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியதில், லாரி கேபின் மீது அமர்ந்து பயணம் செய்த சுமை தூக்கும் தொழிலாளி அருள்தாஸ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சுமை தூக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கேட்டும், தொழிலாளி உயிரிழப்பை கண்டுகொள்ளாத தேங்காய் மண்டி உரிமையாளர் பெருமாள் என்பவரை கண்டித்து வாணியம்பாடி - ஆம்பூர் செல்லும் சாலையில் 50 க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் நகர காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், தொழிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் வாணியம்பாடி - ஆம்பூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.