திருப்பத்தூர்:வாணியம்பாடி முகமது அலி பஜார் பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர், நேமிசந்த். இவர், இன்று (ஜன.13) மதிய உணவு இடைவேளைக்காக தனது மகன் நோஜல் என்பவரை கடையில் வைத்துவிட்டு சென்றார். கடையில் சிறுவன் தனியாக இருந்தபோது வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், கடையில் நகைகள் வாங்க சென்றனர்.
அப்போது, சிறுவனிடம் நகைகளை காண்பிக்குமாறு கூறிய நிலையில் சிறுவன் நகைகளை காண்பித்துக்கொண்டிருந்தார். திடீரென நகை பெட்டியில் வைத்திருந்த இரண்டு நகை பொட்டலங்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதனைக் கண்ட சிறுவன், பஜார் பகுதியில் தப்பி ஓடிய திருடர்களில் ஒருவரை பொதுமக்கள் உதவியுடன் துரத்திப் பிடித்து சரமாரியாக தாக்கினார்.