தமிழ்நாடு

tamil nadu

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: பிடிஓ-க்கள் உட்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு

By

Published : Jul 18, 2021, 6:30 PM IST

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக 3 பிடிஓ-க்கள், பொறியாளர் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு

திருப்பத்தூர் மாவட்டம், நெக்னாமலை அடுத்த புருஷோத்தமன் குப்பம் கிராமத்தில் கடந்தாண்டு ஜூலை 10ஆம் தேதி அதிகாலை பெய்த கனமழையில் குடிசை வீட்டில் வசித்து வந்த அய்யம்மாள் (60) என்பவர் மண்சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

அவருக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், ஊராட்சி செயலாளர் அந்த நிதியை கையாடல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

அவருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டிருந்தால், மூதாட்டி உயிரிழந்திருக்க மாட்டார் என்று கூறி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு

இதையடுத்து, ஆலங்காயம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, 2017-18ஆம் ஆண்டுகளில் பயனாளிகளின் பட்டியல் அடிப்படையில் நெக்னாமலை, கிரிசமுத்திரம், வளையாம்பட்டு, மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத், தேவஸ்தானம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் விசாரணை நடத்தினர்.

அதில், சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த அய்யம்மாள் உட்பட 23 பேருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அரசின் ஆவணங்களில் இருந்ததும்; ஆனால், பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு சென்று சேரவில்லை என்பதும் தெரியவந்தது.

35 லட்சம் அபேஸ்

இந்த திட்டத்தில் தகுதி இல்லாத நபர்களை சேர்த்து பெரியளவில் நிதி முறைகேடு நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் உறுதி செய்தனர். சுமார் 35 லட்சத்து 31 ஆயிரத்து 517 ரூபாய் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

18 பேர் மீது வழக்குப்பதிவு

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி கையாடல் செய்ததற்கான ஆதாரங்களின் அடிப்படையில் 2017-18ஆம் ஆண்டு ஆலங்காயம் கிராம ஊராட்சிகளின் பிடிஓ-க்களாக பணியாற்றிய ரமேஷ் குமார், வசந்தி, வின்சென்ட் ரமேஷ் பாபு, அருண்பிரசாத் உள்ளிட்ட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கூட்டாக சேர்ந்து முறைகேடு

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் கூறுகையில், 'பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், ஆலங்காயம் ஒன்றியத்தில் பயனாளிகள் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததாக கணக்கு மட்டும் எழுதியுள்ளனர்.

ஒதுக்கீடு செய்த நிதியை கூட்டாக சேர்ந்து கையாடல் செய்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தவர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். 18 பேரும் படிப்படியாக விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மழையில் நிலக்கரி பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details