திருப்பத்தூர்:ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு, ஆம்பூர் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நேற்று (அக்.20) ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், பாரம்பரிய கொள்கை மறந்து இஸ்ரேலை ஆதரிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம் என பதாகை ஏந்தி கோஷம் எழுப்பி கண்டன முழுக்கமிட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா செயல்படக் கூடாது எனவும், காசாவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது செல்போனில் டார்ச் லைட்டை ஆன் செய்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பதாகைகள் ஏந்தி இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழுக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டு கொடி பொருத்திய காகிதங்களை தீயிட்டுக் கொளுத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் உடனடியாக இந்த செயலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஜீசான் மற்றும் பிர்தோஸ் ஆகியோர் உள்பட 11 பேர் மீது 3 பிரிவுகளின் 143, 285 மற்றும் 341 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம்பூர் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குஜராத்தில் ஒருவர் கைது!