திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மைய பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் காலியாக இடம் உள்ளது. அந்த இடத்தில் கடந்த பல ஆண்டுகளாக வாரம்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை, கால்நடை சந்தை இயங்கிவந்தன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் கூடுதலாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம், உழவர் சந்தை, தினசரி காய்கறிச் சந்தை ஆகியவை இயங்க தொடங்கின.
கால்நடை சந்தை தற்காலிக இடமாற்றம்: பழைய இடத்தில் சந்தை இயங்க கோரிக்கை
திருப்பத்தூர்: வாணியம்பாடி வாரச்சந்தையில் இயங்கிவந்த கால்நடை சந்தை தற்காலிகமாக கூடுதல் பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கரோனா நோய்ப்பரவலைத் தடுக்க மாவட்டம் நிர்வாகம் அம்மா உணவகம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மட்டும் அனுமதி அளித்தது.
6 மாதத்திற்குப் பின்னர் கடந்த வாரம் உழவர் சந்தை, தினசரி காய்கறிச் சந்தை இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் புதூர் பகுதி புறவழிச் சாலையில் பயன்பாட்டின்றி உள்ள கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் கால்நடைச் சந்தை இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததின் பேரில் இன்று (அக்டோபர் 17) கால்நடை சந்தை இயங்க தொடங்கியது.
கடந்த காலங்களில் கால்நடை சந்தைக்கு வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் சுமார் ஆயிரம் பேர் வருகைதந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் இன்று கால்நடை சந்தைக்கு மிக குறைவாக கால்நடையுடன் விவசாயிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர். இதனால் விரைவில் வாரச்சந்தை மைதானத்திற்கு கால்நடை சந்தையை மாற்ற விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கைவைத்தனர்.