திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர், சின்னக்கண்ணு என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (104). இவர் நேற்று (நவ.20) இரவு வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், அதே ஊரில் வசித்து வரும் வள்ளியம்மாளின் சகோதரர் துரைசாமி (102) என்பவருக்கு, தனது சகோதரி வள்ளியம்மாள் இறந்த நிகழ்வு குறித்து தகவல் கூறப்பட்டுள்ளது.
அதனை அடுத்து, தனது அக்கா இறந்த தகவல் கேட்ட துரைசாமி, மன வேதனையில் ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்தபடியே இருந்ததாகவும், பின்னர் சிறிது நேரத்தில் அமர்ந்திருந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். அதனை அடுத்து உறவினர்கள் துரைசாமியை பார்த்தபோது, அவர் மரணமடைந்து விட்டது தெரிய வந்துள்ளது.
அக்கா இறந்து போன அதிர்ச்சியில் தம்பி இறந்து போன சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. வள்ளியம்மாளின் கணவர் சின்னக்கண்ணு என்பவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 4 மகள்களும், 43 பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
அதேபோல், அவரது தம்பி துரைசாமிக்கு 4 மகன்களும், 2 மகள்களும், 57 பேரக் குழந்தைகள் உள்ளனர். இறந்து போன துரைசாமியின் மகன் அண்ணாமலை என்பவர் செட்டியப்பனூர் பகுதிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். மேலும், இறந்து போன வள்ளியம்மாள் மற்றும் துரைசாமியின் உடல்கள் இன்று (நவ.21) மாலை அதே ஊரில், அருகருகே அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆவடி துணை ஆணையர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் வெளியிட்ட வீடியோ!