திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் கார்பெண்டராகப் பணியாற்றிவரும் நிலையில் இவரது மனைவி செந்தாமரை ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒன்றில் பணியாற்றிவருகிறார். இவரது வீடு சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 9) காலை 9.30 மணிக்கு வழக்கம்போல் வீட்டிலிருந்த அனைவரும் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற நிலையில் அருகில் உள்ள பள்ளியில் பதினோராம் வகுப்புப் படித்துவரும் விஜயகுமாரின் மகன் மதன்குமார் மதிய உணவு இடைவேளையில் வீட்டிற்குச் சாப்பிட வந்துள்ளார்.
அப்போது வீட்டின் வெளிப்புற கேட், கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உடனடியாக தந்தை விஜயகுமாருக்குத் தகவல் அளித்திருக்கிறார். இதனையடுத்து, வீட்டிற்கு வந்த விஜயகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15.5 சவரன் தங்க நகைகள், 16 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் கொள்ளை நடைபெற்ற இடத்தில் பல்வேறு தடையங்களைச் சேகரித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்