மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி நிலைமை குறித்து விளக்கம் அளிக்கும் கூட்டம் திருப்பத்தூர் பாஜக சார்பில் இன்று (பிப்.7) நடைபெற்றது. அதன் பின்னர் மாநில துணை தலைவர் நாகேந்திரன் மற்றும் மாநில துணை செயலாளர் கார்த்தியாயனி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பாஜக மாநில துணைத் தலைவர் நாகேந்திரன் பேசுகையில், ”காகிதமில்லா ஒரு பட்ஜெட் மூலமாக 140 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. விவசாயிகள் மேம்பாட்டிற்காக இந்தமுறை அதிகபட்சமாக 16.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்குவதன் மூலமாக தமிழ்நாட்டில் மட்டும் 34 லட்சம் விவசாயிகள் பயனடைகின்றனர். பிரதமரின் வழியில் முதலமைச்சர் எடப்பாடியும் விவசாயிகளின் நலன் கருதி விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருப்பது பாராட்டுக்குரியது.
விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைவிட கூடுதலாக 50 விழுக்காடு விலை நிர்ணயித்து 17 வகையான விளைபொருட்களுக்கு அரசே வாங்கிக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.
தொடர்ந்து மத்திய பட்ஜெட் அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இல்லையே என்ற கேள்விக்கு, ’தமிழ்நாட்டில் பாஜக எம்பி ஒருவர்கூட இல்லாத நிலையில் தமிழ்நாடு மக்கள் ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் மத்திய அரசு தாயுள்ளத்தோடு 11 மருத்துவ கல்லூரிகளை வழங்கியிருக்கிறது. கரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது’என்றார்.
குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் வெடித்த வன்முறை குறித்து பேசிய அவர், ’தேசவிரோத சக்திகள் நிகழ்த்திய வன்முறையை எந்த ஒரு தன்மானமுள்ள குடிமகனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் விவசாயிகளின் போராட்டத்தை நியாயப்படுத்தினாலும் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டதை பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையைப் பார்த்தால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள் உண்மையிலேயே இந்த நாட்டின் குடிமகன்தானா என்கிற சந்தேகம் எழுகிறது’என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அண்ணா வழியில் விமர்சனங்களை எதிர்கொள்கிறாரா தினகரன்?