திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ். இவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் அமீர் பாஷா, ஊராட்சி பணம் 10 ஆயிரத்தை அலுவலக வங்கி கணக்கில் டெபாசிட் செய்யுமாறு கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளார்.
இதை பெற்றுக் கொண்ட கோவிந்தராஜ் அதில் ஒன்பது ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அதே ஊராட்சியில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் 1000 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து வங்கியில் டெபாசிட் செய்து விடுமாறு தெரிவித்துள்ளார். பின்னர் அந்த பெண் வங்கிக்குச் சென்று ரூ.1000 செலுத்தி விட்டு அதற்கான ரசீதை கோவிந்தராஜிடம் கொடுத்த போது, அவர் அந்த ரசீதில் 1000 ரூபாய் ஆக இருந்ததைப் பத்தாயிரம் ரூபாயாக மாற்றி ஊராட்சி மன்ற தலைவரிடம் கொடுத்துள்ளார். பின் அதில் சந்தேகம் அடைந்த தலைவர் வங்கிக்குச் சென்று விசாரித்த போது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் ஊராட்சி மன்ற தலைவருக்குத் தெரிந்து விட்டது என்பதற்காக உடனடியாக ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் பணம் கொடுத்து அனுப்பிய பெண்ணிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ஆடியோவில், "வங்கியில் என்னைப் பார்த்து விட்டார்கள் அதனால் என்ன செய்வது தெரியவில்லை. உன்னைத் திட்டுவது போல் திட்டுகிறேன், வேறு வழியில்ல. தப்பு பண்ணா அதை திருத்துவதற்கு வழி நம்ம பண்ணனும் பயப்படகூடாது. பணத்தை கேட்டால் வட்டி கட்ட முடியவில்லை என ஏதேனும் காரணம் கூறு என கூறியுள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் பெயர் கெட்டுவிடும் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வங்கியில் இதுகுறித்து தலைவர் விசாரித்தார்களா என விசாரிக்கிறேன்" என பேசியுள்ளனர்.