திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் ஜன.27ஆம் தேதியான இன்று நடைபெறவிருந்த எருது விடும் திருவிழா தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஆனதால் திடீரென ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, வீராங்குப்பம் கிராமத்தில் தேர்தல் வெற்றி பெற்றது தொடர்பாக ஏற்கெனவே இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவி திவ்யாவின் கணவர் ஜானகிராமன் என்பவர் நேற்று நள்ளிரவு எருது விடும் திருவிழா தொடர்பாக ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த பெண்கள் சிலரைக் கேலி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருதரப்பு மோதல்
இதனால் நள்ளிரவே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவல் துறை இருதரப்பிற்கும் இடையே சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் சென்றுகொண்டிருந்த ஜானகிராமன் மீது எதிர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஜானகிராமன் ஆம்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து, சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.