திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் ரயில்வே தண்டவாளம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இவ்வாறு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், உயிரிழந்த நபர் அருணாச்சலப்பிரதேச மாநிலம் நான்சி பகுதியைச் சேர்ந்த பதம்பஹதூர் தப்பா என்பது தெரிய வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல், அவர் தனது மனைவி, மகன் மற்றும் உறவினர் ஒருவருடன் வேலைக்காக கேரளா செல்வதற்காக அசாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்து உள்ளார்.