திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை அடுத்த புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 53). இவர் அதிமுக ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவருக்கு சோமு என்ற மகனும், அறிவழகன் என்ற மருமகனும் உள்ளனர். மேலும், இந்த இருவருடன் சேர்ந்து தாமோதரன், கார்த்திக் ஆகிய 4 பேர் கிராம நிர்வாக அலுவலர்(VAO) பணிக்கான அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் தேர்வு எழுதி தோல்வி அடைந்து உள்ளனர்.
இந்நிலையில், இந்த 4 பேருக்கும் கிராம நிர்வாக அலுவலர் அரசு பணி பெற்று தருவதாகக் கூறி எல்லப்பனிடம் கடந்த 2018ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம், வழிவளம் கிராமத்தைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பாலதண்டாயுதம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பரமசிவம், சுரேஷ் ஆகிய 3 பேரும் ரூ. 27 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு, எல்லப்பனின் மகன் மற்றும் மருமகன் ஆகிய 2 பேருக்கு போலியான கிராம நிர்வாக அலுவலர் பணி ஆணைகளை வழங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இந்த பணி ஆணைகள் போலியானது, என சில மாதங்களில் தெரிய வந்தது. இந்நிலையில், இது குறித்து எல்லப்பன் கடந்த 2022ஆம் ஆண்டு திம்மாம்பேட்டை காவல் நிலையத்திலும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். மேலும், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் எல்லப்பன், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக மனுதாக்கல் செய்தார்.