திருப்பத்தூர்:ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகி இல்ல விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், " திருப்பத்தூர் மாவட்டத்தைப் பிரிக்கக்கோரி பல ஆண்டுகளாக தொடர் போராட்டம் செய்து அதில் வெற்றியும் கண்டோம். ஆனால், இதுவரை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எந்த ஒரு தொழிற்சாலையும் வரவில்லை. அதேபோல, பாலாறு பிரச்னையும் இதுவரை சரி செய்யப்படவில்லை.
வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள செட்டேரி அணைக்கு நீர்வரத்து வருவதற்கு எந்தப் பணியும் இதுவரை செய்யவில்லை. திருப்பத்தூர் மாவட்டத்தைப் பிரித்த பிறகு, அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வர வேண்டும். ஆனால், இதுவரை தமிழக அரசு கொண்டுவரவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.
ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 48 பேர் பலியாகி உள்ளனர். சட்டம் இயற்ற ஆளுநருக்கு கடிதம் அனுப்பியும் அவர் நிராகரித்ததால் 19 பேர் மரணமடைந்தனர். அந்த மரணத்திற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்கள் மும்முனை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். மது, போதைப்பொருள் மற்றும் ஆன்லைன் சூதாட்டம். இதைத் தடுக்க தமிழக அரசு தவறி உள்ளது.
பாமக சார்பில் முதலமைச்சருக்குப் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் முதலாவது போதை பொருளுக்கென தனி பிரிவு ஏற்படுத்தி அதற்கு டிஐஜியினை நியமிக்க வேண்டும். போதை பொருட்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதேபோல என்எல்சி நிறுவனத்திற்கு கடலூர் பகுதிகளில் 26 கிராமங்களில் சுமார் 12,125 ஏக்கர் நிலங்களை சுரங்கத்திற்கு தாரை வார்க்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தச் சுரங்கம் 2026ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும் என்றும் என்எல்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.