வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட எல்லை மலைப்பகுதியில் உள்ள அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா கரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொழுது போக்கு பூங்காக்கள், திரையரங்கங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டுப்பாட்டில் உள்ள அமிர்தி பூங்காவும் எட்டு மாதங்களுக்குப்பிறகு இன்று திறக்கப்பட்டது.
பூங்கா நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் அனைத்து வாகனங்களின் சக்கரங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.