திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண், பெண் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டு வருவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் வைப்பு நிதியானது தொழிலாளர் கணக்கில் செலுத்தப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், காலணி தொழிற்சாலை இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் நேற்று (ஜூலை 12) இரவு முதல் பணி முடிந்து வெளியேறாமல் தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், காலணி தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொழிற்சாலை நிர்வாகம் கழிவறைக்குச் செல்லக் கூடிய குடிநீர் இணைப்பை துண்டித்து உள்ளதாக தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் உடன் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், காவல் துறையினரின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தொடர்ந்து தொழிற்சாலை வளாகத்திலேயே சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.