திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இன்று 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 அதிநவீன வசதிகள் கொண்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத்தை மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பேசிய ஆம்பூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதனுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் வீரமணி, ”இந்த கூட்டம், சட்டசபைக் கூட்டம் போல் மாறிவிட்டது. எதிர்க்கட்சிகள் குறைகளைச் சுட்டிக் காட்டுவதும் அதை ஏற்று ஆளும் கட்சிகள் குறைகளை நிவர்த்தி செய்வதும் காலம் காலமாக நடைபெற்றுவருகிறது.
ஆனால், தற்போது திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் அனைத்தும் நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியும். ஆம்பூர் மருத்துவமனை மீது அதிக அக்கறை உள்ளதால் தான் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு 18 கோடி ரூபாயை அதிமுக அரசு ஒதுக்கியுள்ளது” என்றார்.