திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 5 ஆயிரத்து 76 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை அனுப்பிட கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்வதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவனருள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மேற்கொண்டார்.
இதைத் தொடர்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தேர்வுசெய்யப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட பட்டியல் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டன. இதையடுத்து, சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் இயந்திரங்களை வரிசைப்படி எடுத்துச் சென்றனர்.
திருப்பத்தூர் தொகுதிக்கு புதிய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ள கட்டடத்திலும், ஜோலார்பேட்டை தொகுதிக்கு நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திலும், வாணியம்பாடி தொகுதிக்கு வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆம்பூர் தொகுதிக்கு ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.
இணையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு மையம் கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் காவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனா கார்க், நேர்முக உதவியாளர் தேர்தல் வில்சன் ராஜசேகர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காயத்ரி சுப்ரமணியன், லக்ஷ்மி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், தேர்தல் வட்டாட்சியர் பிரியா, அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு