திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய ,பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் வாக்காளர் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.சி. வீரமணி , நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
பின்னர் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி, “திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காமல் அதிமுகதான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். நான்கு தொகுதிகளிலும் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
அதிமுக தொண்டர்கள் அந்தந்த தொகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் களத்தில் இறங்கி அதிமுக திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி பணியாற்ற வேண்டும். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அலுவலர்களை எவ்வாறு பேசுகிறார்கள். அவர்கள் திட்டுகிறார்கள் என்று அரசு அலுவலர்கள் அச்சப்படுகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறு இருக்கும்.
அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் யாரையும் தரக்குறைவாக பேசியது இல்லை என்பதை மக்கள் மத்தியில் புரியவைக்க வேண்டும்` என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், `கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டிலும் அதிமுக ஆட்சி நல்லாட்சி என்று மக்கள் மத்தியிலே பேசப்பட்டு வருகிறது. அதே போன்று 2021ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அற்புதமான ஆட்சி என்று மக்கள் பேசவேண்டும். இதற்கு அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாகவும், விசுவாசமாகவும் செயல்பட்டால் 2021ஆம் ஆண்டில் அதிமுக வெற்றி பெறும் என்பது உறுதி` என்றார்.