திருப்பத்தூர்: அருகே வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இன்று பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி மற்றும் பேரூராட்சி தலைவர் பூசாராணி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் 8 பேர் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் 1 சுயேட்சை கவுன்சிலர் என 15 பேர் பங்கேற்ற நிலையில், இக்கூட்டத்தில் அதிமுக வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கலந்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பேரூராட்சியில் அதிமுக 2வது வார்டு உறுப்பினர் பரிமளா அவருடைய கணவர் கூட்ட அரங்கு வெளியில் இருந்து பேரூராட்சியில் பல்வேறு முறைகேடு நடப்பதாக கூச்சல் எழுப்பினார். இதனால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 1வது வார்டு அதிமுக உறுப்பினர் சரவணன் கூட்ட அரங்கில் இருந்த நாற்காலியை தூக்கி எறிந்து உடைத்து சேதமாக்கினார்.
பின்னர், அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் படுத்து தர்ணா போராட்டத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஈடுப்பட்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
உதயேந்திரம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா! இதில் அவசர அவசரமாக கூட்டம் நடைபெற்று முடிந்ததாக பேரூராட்சி தலைவர் பூசாராணி கையொப்பமிட்ட கடிதத்தை தகவல் பலகையில் பேரூராட்சி ஊழியர்கள் ஓட்டினர். இதனால் மேலும் போராட்டத்தை தீவிர படுத்திய பேரூராட்சி உறுப்பினர்களால் உடனடியாக தகவல் பலகையில் இருந்த கடிதத்தை ஊழியர்கள் அப்புறப்படுத்தி கிழித்தெறிந்தனர். இதனால் பேரூராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதியிடம் கேட்டபோது கூட்டம் தற்போது பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசி பின்னர் தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:முதல்வரை ஆபாசமாக பேசிய பாஜகவினர்: திமுகவினர் சாலை மறியல்!