திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் தலைமை வகித்தார். இதில் வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபீல் ஆகியோர் கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக் திறந்துவைத்தனர்.
வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட அமைச்சரும், எம்.எல்.ஏவும் மதனாஞ்சேரி ஊராட்சி, ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்டது என்பதால், அதன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மேடையில் ஏறி விழா அழைப்பிதழில் தன்னுடைய பெயர் புறக்கணிகப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டார்.
அப்போது அமைச்சர் வீரமணி குறுக்கிட்டு, இது அதிமுக மேடை என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது வில்வநாதன், அதிமுக மேடை என்றால், மாவட்ட ஆட்சியருக்கு மேடையில் என்ன வேலை என்று கேள்வியெழுப்பிவிட்டு, அதிமுக மேடை என்றால் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார். இதனால் மேடை முன்பாக இரு கட்சியினர் இடையில் சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சர் - திமுக எம்.எல்.ஏ இடையே சூழ்ந்த வாக்குவாதம் இவ்விழா, நண்பகல் 1 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுகவினர் பொது மக்களை காலை 10 மணிக்கே வரவழைத்து விழா மேடை முன்பாக அமர வைத்திருந்தனர். ஆனால் விழா மாலை 4 மணிக்கு தான் தொடங்கியது. சுமார் 6 மணி நேரம் கர்ப்பிணிகள் உட்பட ஏராளமானோர் உணவின்றி அமர்ந்திருந்து பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
விழா நடக்கும் ஊராட்சி திமுக சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்டது என்பதால், சாலையின் ஒருபுறம் அதிமுகவினர் கட்சி கொடி கம்பங்களையும், தோரணங்களையும் கட்டியிருந்தனர். மறுபுறம் திமுகவினர் கட்டி இருந்தனர். இதனால் பதற்றமான சுழல் உருவானதால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.