திருப்பத்தூர்: ஆம்பூர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நகர கழக செயலர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது பேசிய அவர், ”கூட்டத்திற்கு வருகை தரும்போது உள்ளே நுழைய முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அமைந்துள்ளது. இதனைப் பார்க்கும்போது ஆம்பூர் சட்டப்பேரவை அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதை நீங்கள் உறுதி செய்துள்ளீர்கள். ஆனால் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தேர்தலில் எதிரிகளின் பலத்தை எதிர்கொண்டு அவர்களுக்கு இணையாக நாம் செயல்பட வேண்டும்.
கடந்த இடைத்தேர்தல்களில், தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலினின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி மக்கள் ஏமாந்து போனார்கள். அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்து விட்டனர். ஆனால் இடைத்தேர்தல் முடிந்து 60 நாள்களில் நாடாளுமன்றத் தேர்தலின்போது நாம் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இழந்த வாக்கினை ஈடுசெய்துள்ளோம். ஆகையால் மக்கள் உணர்ந்து, யார் நமக்கு நல்லாட்சி தருவார்கள் எனப் புரிந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் அந்த வாக்குறுதியை 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அவர் நிறைவேற்றினார்.