திருப்பத்தூர்: தனியார் சொகுசு விடுதியில் திருப்பத்தூர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களுக்கு பிரத்தியேகப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழிலாளர் துறை அமைச்சருமான நிலோபர் கபில், இந்தத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் வாய்ப்பு அளிக்கவில்லை. அதற்கு முழு காரணம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தான் என பகிரங்கமான குற்றச்சாட்டை என் மீது அவர் வைத்து வருகிறார்.
இது முற்றிலும் தவறானது. ஏனெனில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை என்ற பொழுதிலே அவர் கட்சிக்கு எதிராக செயல்படுகிறார் எனவும், அது மட்டுமின்றி வாணியம்பாடி நகர் பகுதியில் அவர் போட்டியிட்ட வார்டு பூத்துகளிலில், இரண்டு ஓட்டு, 12 ஓட்டு, 16 ஓட்டு, 31 ஓட்டு என வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இந்த செயல்பாடு ஒன்றே அவரை கட்சியில் இருந்து நீக்கப் போதுமானது. அதுமட்டுமன்றி வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு ஒதுக்கப்படும் பணத்தை கிராமப்புறங்களில் செலவழிக்காமல் நகர் பகுதிகளில் மட்டுமே செலவழித்து வந்துள்ளார்.
அமைச்சர் பதவி மட்டுமே இவரது முக்கியக் குறிக்கோளாக இருந்தது. மக்கள் நலனைப் பார்க்காமல் செயல்பட்டதால் அவருடைய சொந்தத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். தலைமை முடிவு செய்ததன் பெயரிலேயே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, என்னுடைய உந்துதல் எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மந்திரி பதவி மட்டுமே கண்ணுக்குத் தெரிந்ததே தவிர கட்சி பற்றி கவலைப்படவில்லை, கட்சிக்காரர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கட்சிக்காரர்கள் மத்தியிலும் முற்றிலுமாக அவர் புறக்கணிக்கப்பட்டார்.