திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கள்ளாச்சாராய கும்பலை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். இந்நிலையில் கள்ளச்சாராய கும்பலுக்கு, காவலர்கள் சிலர் உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில், திருப்பத்தூர் தாலுகா காவல் நிலைய சிறப்பு எஸ்.எஸ்.ஐ-க்கள் சிவாஜி, வெண்ணிலா, ஏட்டு வசந்தா மற்றும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவலர் கோபி ஆகியோர் கள்ளச்சாராய கும்பலுக்கு உதவியாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் 4 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
காவலர்கள் 4 பேரும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் இணைந்து, சாராயம் காய்ச்சவும், அதை விற்பனை செய்யவும் உறுதுணையாக இருந்தது அம்பலாகியுள்ளது. இதற்காக, 4 பேரும் கள்ளச்சாராய வியாபாரிகளுடன் லஞ்சம் பெற்றுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை, எஸ்.பி ஆல்பர்ட் ஜான் மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றி காவலர்கள் 4 பேரும், சாராய வியபாரிகளுக்கு தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: Odisha Train Accident: 'எதையும் மூடி மறைக்கவில்லை..ஒளிவு மறைவற்ற விசாரணை' - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ