திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (28) என்பவருக்கும், எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணுக்கும் ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ரமேஷ் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
தற்போது ஹேமலதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், வயிற்று வலி காரணமாக கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது ஹேமலதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், இது பிரசவ வலி. குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி விடுங்கள் என கூறியுள்ளனர்.
இந்த நிலையில், ஹேமலதா மருத்துவமனையில் அனுமதி பெறாமல் வீட்டிற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஹேமலதாவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு வீட்டிலேயே பெண் குழந்தையும் பிறந்துள்ளது. உடனடியாக பெண் வீட்டார் ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆம்புலன்சில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர்கள் ஹேமலதாவின் தொப்புள் கொடியை துண்டித்துள்ளனர்.