திருப்பத்தூர்:ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ ஓட்டுநரான இவர் தினமும் சோலூர் மற்றும் ராஜகோபால் நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தினமும் காலையில் ஆட்டோவில் ஏற்றிச்சென்று விடுவது வழக்கம். அதே போல் இன்று (ஜூலை 18ஆம் தேதி) காலையில் வழக்கம் போல் சோலூர் பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, சான்றோர்குப்பம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி, சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும், பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது பின்பக்கமாக மோதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் பிரபல பிரியாணி ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு!
இதில், லாரி மோதியதில் ஆட்டோ திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ ஒட்டுநர் உட்பட பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பயங்கர சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் இருசக்கர வாகனத்தில் வந்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த நபர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.