திருப்பத்தூர்:ஆம்பூர் இரண்டாவது தார்வழி பகுதியைச் சேர்ந்தவர், வெங்கடேசன். லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இவருக்கு மதுமிதா(13) என்ற மகள் உள்ளார். மதுமிதா ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், நூர்அஹமத். இவர் மாணவி மதுமிதாவிடம் விடுமுறை விண்ணப்பம் எழுதச் சொல்லியும், மாணவி கையில் மருதாணி வைத்திருந்ததை கண்டித்தும் மாணவியை வகுப்பறை பலகையைக் கொண்டு தாக்கியுள்ளார். மேலும் அவர் மாணவியின் கையைப் பிடித்து, திருப்பி பலமாக தாக்கியதில், கை மணிக்கட்டுப் பகுதியில் மாணவி பலத்த காயமடைந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட வலியால் மாணவி வகுப்பறையில் சோர்வாகவே இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்ற மாணவி சோர்வுடன் இருந்ததைக் கண்டு பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் தாக்கியதில் கையில் பலத்த காயமடைந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், செய்வதறியாமல் சிகிச்சைக்காக மாணவியை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பந்தம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தலைமை ஆசிரியர் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளார். சிகிச்சைக்குப் பிறகு, பள்ளி மாணவி மீண்டும் பள்ளிக்கு சென்றபோது, அதே ஆங்கில ஆசிரியரால் மீண்டும் தாக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர், பள்ளி வளாகத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.