தீரா காதல்: மனைவிக்கு சிலை வைத்து முதலாம் ஆண்டு நினைவு நாளை சிறப்பித்த கணவர் - மனைவிக்கு சிலை அமைத்து முதலாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடி மகிழ்ந்த கணவர். திருப்பத்தூர் அருகே சுவாரஸ்யம்....
மனைவிக்கு சிலை அமைத்து முதலாம் ஆண்டு நினைவு நாளை கணவர் ஒருவர் கொண்டாடியுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஆதியூர் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராஜ் (57). இவருக்கு 1985ஆம் வருடம் மலர்க்கொடி என்பவருடன் திருமணமாகி மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூரு பகுதியில் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மலர்க்கொடி திடீர் மாரடைப்பால் பெங்களூரு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுமார் 35 வருடங்கள் மனைவி கொடியுடன் ஆழமான காதலை சுமந்து அன்யோன்யமான வாழ்க்கை நடத்திய கோவிந்தராஜ், மனைவியின் பிரிவால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் மைசூர் பகுதியில் மனைவியை பிரிந்த ஒரு நபர் தன்னுடைய மனைவிக்கு ஊஞ்சலில் சிலை வைத்து அழகு பார்த்ததை கண்ட கோவிந்தராஜ், தன்னுடைய மனைவிக்கும் அதே போல் ஒரு சிலையை வைத்துக் கொண்டால் மனைவி தன் கூடவே இருப்பது போல் இருக்குமே என்று பல இடங்களில் தேடி திரிந்து அலைந்து மனைவியைப் போலவே தத்ரூபமாக ஒரு சிலையை வடிவமைத்து மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அதை நிறுவி மகிழ்ந்துள்ளார்.
இவர் மனைவியின் உருவத்தை சிலை வடித்து முதலாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.