திருப்பத்தூர் மாவட்டம்நரியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவர் ஊராட்சி மன்ற தலைவராகவும், கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில் திமுக கவுன்சிலராகவும் உள்ளார். திமுகவில் எம்எல்ஏ சீட்டு கேட்டு முயற்சி செய்தபோது பாரதிக்கு கிடைக்கவில்லை. இதனால் அரசு பணி வாங்குவதில் தீவிரம் காட்டி வந்துள்ளார்.
இதனிடையே வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் நடத்தி வரும் அதிமுகவைச் சேர்ந்த பாலச்சந்திரன் மூலம் புவனேஷ் அவரது மனைவி ராஜலக்ஷ்மி ஆகியோரிடம் பாரதி அறிமுகமாகி உள்ளார். புவனேஷ் - ராஜலட்சுமி இருவரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி காலியாக இருப்பதாக கூறியுள்ளனர். அதோடு அந்த பதவியை வாங்கி தருவதாக பாரதியிடம் கூறியுள்ளனர்.
அதற்கு ரூ. 1 கோடி செலவாகும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதை நம்பிய பாரதி, சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து 34 லட்ச ரூபாயை புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமிடம் கொடுத்துள்ளார். அப்போது அவர்கள் ஐஏஎஸ் அதிகாரி என்று சசிகுமார் என்பவரை பாரதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அதன்பின் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவரை சந்தித்து ரூ.43 லட்ச ரூபாயை பாரதி கொடுத்துள்ளார்.
அப்போது இந்த பணத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான் இந்த பதவியை வாங்கி தர உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பின் பல மாதங்கள் கழிந்தும் பதவி வாங்கி தராததால் சந்தேகமடைந்த பாரதி பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.