திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர், அப்பகுதியில் அரைவை ஆலை நடத்திவருகிறார். இவரது அரைவை ஆலைக்குப் பின்புறமாக மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் வீட்டில் வைத்து சாராய வியாபாரம் செய்துவருகின்றனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில் சாராய வியாபாரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அரைவை ஆலையைக் காலிசெய்ய வேண்டும் என சம்பத்தை மிரட்டியுள்ளனர்.
இல்லையெனில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் தங்களுக்குத் தர வேண்டும் என மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் ஆகியோர் சம்பத்தின் குடும்பத்தினரை மிரட்டிவந்துள்ளனர்.
இதனால், பயந்துபோன சம்பத், கடந்த ஆறு மாதங்களாக அரைவை ஆலையை பூட்டியே வைத்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தங்களுக்குப் பாதுகாப்பு அளித்து, சாராய வியாபாரத்தை தடுக்குமாறு சம்பத் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.
அரைவை ஆலையைத் திறந்து தொழிலைப் பாருங்கள் எனக் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, நேற்று மதியம் திறந்துள்ளார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உள்ளிட்ட அவர்களது கூட்டாளிகள் சுமார் 15 பேர் அரைவை ஆலைக்குள் புகுந்து சம்பத்தைத் தாக்கியுள்ளனர்.
தாக்கப்பட்ட அரைவை ஆலை உரிமையாளர் இதில் படுகாயமடைந்த சம்பத், வாணியம்பாடி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக கோஷ்டி மோதல்: ஒருவர் கொலை