திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்புபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்பதி நந்தகுமார் மற்றும் ரேவதி ஆகியோர். இவர்களது மகன் 4 வயதான கோகுல், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் தாய் ரேவதி, குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அருகே இருந்த ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து வெகுநேரம் ஆகியும் தாயைக் காணாத சிறுவன், அவரை தேடி வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். வீட்டின் அருகே மாவட்ட நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்ட பண்ணைக் குட்டையின் ஆபத்து குறித்துத் தெரியாத அந்த குழந்தை, குட்டைக்குள் தவறி விழுந்துள்ளான். கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் அந்த குட்டையில் தண்ணீர் தேங்கிக் கிடந்த நிலையில், சிறுவன் அந்த நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதையும் படிங்க:கோவை நகரின் முக்கிய இடங்களில் ரேடார் கேமராக்கள்.. 40 கி.மீ வேகத்தை தாண்டினால் அபராதம்!
சம்பவம் குறித்து எதுவும் தெரியாத சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோகுலைத் தேடி அந்த கிராமம் முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பக்கத்தில் உள்ள அந்த பண்ணைக் குட்டையில் பார்க்கலாம் என்று நினைத்துச் சென்று பார்த்த பெற்றோர், சிறுவன் நீரில் மூழ்கி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குழந்தையை இரவோடு இரவாக மீட்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை உடற்கூராய்வு செய்யாமல் தகனம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:சி.எஸ்.ஆர் நிதி தொடர்பான ஆளுநர் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அந்த பண்ணை குட்டையை உடனடியாக மூட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த பண்ணை குட்டை மூடப்பட்டது.
மேலும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பண்ணை குட்டை அமைக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மேலும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 1600 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அதை விரைந்து முடிக்கவும், போதுமான ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தாயைத் தேடிச் சென்ற சிறுவன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்குக-கோழி வளர்ப்புத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!