கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பிற மாநிலங்களைச் சேர்நதவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பேருந்துகள், ரயில்களை இயக்கிவருகின்றன.
மேற்கு வங்கம் நோக்கி 1,476 பேருடன் சிறப்பு ரயில் புறப்பட்டது
வேலூர் மாவட்டதிலிருந்து பிற மாநிலத்தவர்கள் 1,476 பேருடன் மேற்கு வங்கம் நோக்கி எட்டாவது பயணிகள் சிறப்பு ரயில் புறப்பட்டது.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட நிர்வாகம், அம்மாவட்டத்தில் உள்ள பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களை சிறப்பு ரயில்கள் மூலம் படிப்படியாக அனுப்பிவருகிறது. அதன்படி, நேற்றிரவு (மே 18) மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிகிச்சை பெற்று வந்தவர்கள் 1,476 பேர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், காவல் துறைக் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் பிற மாநிலத்தவர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டுவந்த நிலையில், இன்று 1,476 பேருடன் மேற்கு வங்கம் நோக்கி எட்டாவது பயணிகள் சிறப்பு ரயில் புறப்பட்டுள்ளது. மீதம் இருக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 1,400 பேர் அடுத்த சிறப்பு ரயிலில் அனுப்படுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க:டெல்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்த 558 பேர்