திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்த ஆட்சியர் அமர் குஷ்வாஹா, அக்டோபர் 10ஆம் தேதி ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் வீடு வீடாக வந்து செவிலியரும், நகராட்சி ஊழியர்களும் தடுப்பூசி போட இருக்கிறார்கள் எனவும், இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
மேலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்தும்விதமாக குலுக்கல் முறையில் மூன்று நபர்களுக்கு 32 இன்ச் எல்இடி டிவி வழங்கப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்களில், நத்தம், வள்ளிப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த பாப்பாத்தி, பெருமாள், தாமரைச்செல்வி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அறிவித்த 32 இன்ச் எல்இடி டிவி பரிசைத் தட்டிச் சென்றனர்.
பேராம்பட்டு மாதனூர் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த மதி, இந்துமதி, புஷ்பா ஆகியோர் ஆறுதல் பரிசுகளை வென்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பேசுகையில், அடுத்துவரும் தடுப்பூசி முகாம்களிலும் இதேபோன்று பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 1303 பேருக்கு கரோனா