டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூபாய் 3 லட்சம் கொள்ளை! - டாஸ்மாக் ஊழியர்களிடமிருந்து கொள்ளை
திருப்பத்தூர்: ஆலங்காயம் அருகே டாஸ்மாக் ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி 3 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூர் அருகே உள்ள பீமக்குளம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு(ஆகஸ்ட் 3) விற்பனை முடித்து விட்டு டாஸ்மாக் ஊழியர்களான வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜலகண்டீஸ்வரன் (எ) சரவணன், பூங்குளம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பீமக்குளம் பகுதியிலிருந்து இருந்து ஆலங்காயம் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெரிய முடக்கு என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த 3 பேர் டாஸ்மாக் ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி 3 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் காவலூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், தனிப்படை ஆய்வாளர் இருதயராஜ் உள்ளிட்டோர் சம்பவம் நடைபெற்ற இடத்திலும் அங்குள்ள சோதனை சாவடியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.