திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டில் உள்ள சோதனைச் சாவடியில் உமராபாத் காவல் துறையினர் இன்று (டிசம்பர் 24) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள், இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளைஞர் நரியம்பட்டைச் சேர்ந்த முகமது முஜாகிதீன் என்பது தெரியவந்தது.
இவன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் ஒரே மாதத்தில் 82 புல்லட் பைக்குகளைத் திருடி விற்பனை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து முகமது கடந்த சில மாதங்களுக்கு முன்பே விடுதலையாகி சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்.
அதன் பின்னர் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து முகமது முஜாகிதீனைக் கைது செய்த காவல்துறையினர், அவனிடமிருந்த 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:Teacher suspended: மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கணினி ஆசிரியர் பணியிடை நீக்கம்