தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி மழை பாதிப்பு.. மீட்புப் பணியில் ஈடுபட்ட கிராம இளைஞர்கள்! - Chhanalveti news

Thoothukudi rain: தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய சென்னல்பட்டி கிராம மக்களை, அந்த கிராம இளைஞர்கள் 80க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து மீட்டுள்ளனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட கிராம இளைஞர்கள்
சென்னல்பட்டி கிராமம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 1:27 PM IST

தூத்துக்குடி மழை பாதிப்பு

தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து ஆங்காங்கே தீவு போல் காட்சியளிக்கிறது.

தூத்துக்குடியில் பெய்த கனமழையால், அப்பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி உடைந்ததால், வெள்ள நீரானது குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கனமழையால் கிராமங்களின் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு தனித்தீவாக பல கிராமங்கள் உள்ளது.

இந்நிலையில், மழை வெள்ளத்தில் தூத்துக்குடி- நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள சென்னல்பட்டி கிராமம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதில், அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமாகியுள்ளது நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், கிராம மக்கள் வேதனையில் இருக்கின்றனர். அதோடு, விளை நிலங்களில் வெள்ளம் பாய்ந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, கனமழையில் சிக்கித் தவித்த சென்னல்பட்டி கிராம மக்களை, அப்பகுதி இளைஞர்கள் 80க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கிராம மக்களை கயிறு கட்டி வெள்ளத்திலிருந்து மீட்டுள்ளனர்.

இது குறித்து சென்னல்பட்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் கூறுகையில், "எங்கள் ஊர் தூத்துக்குடி- நெல்லை மாவட்ட எல்லையில் இருக்கிறது. சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையில் கிராமத்தின் குளங்கள் உடைந்து, வெள்ள நீரானது குடியிருப்பு பகுதிகளில் வரத் தொடங்கியது. மேலும், தாமிரபரணி ஆற்று நீரும் ஊருக்குள் வரத் தொடங்கியதால் சாலைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

1992 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது மிகப்பெரிய அளவில் வெள்ளைச் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளதால் கிராம மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் நிற்கின்றனர். 1500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் இதுவரை எந்த ஒரு நிவாரணம் கிடைக்கவில்லை. உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

மேலும், கிரமத்தில் தண்ணீர் அதிகரித்ததால், கிராம மக்களை கப்பாற்ற நினைத்து ஊரிலுள்ள 80 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராம மக்களை கயிறு கட்டி மீட்டு மேடான பகுதிக்கு கொண்டு வந்தோம். மேலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகளைக் கயிறு கட்டிலில் அமரவைத்து தலையில் சுமந்து சென்றோம். தொடர்ந்து, ஆடு, மாடுகளையும் தோளில் சுமந்து காப்பாற்றினோம். தற்போது வெள்ளம் வற்றிய பிறகும்கூட யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை.

எனவே, அரசு உடனடியாக தங்களுடைய கிராமத்திற்கு வந்து அதிகபட்ச நிவாரணங்களை தர வேண்டும். அது மட்டும் இல்லாமல் வெள்ளத்தில் ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அதனை நம்பி இருந்த விவசாயிகள் தற்போது தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் நிற்கின்றனர். வெள்ளத்தில் வீட்டிலிருந்த அரிசி,பருப்பு, பாத்திரங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் உணவுக்காக பசியோடு காத்திருக்கின்றனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி கனமழை பாதிப்பு.. களத்தில் இறங்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்!

ABOUT THE AUTHOR

...view details