தற்கொலைக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்! தூத்துக்குடி:தாளமுத்துநகர் அருகே உள்ள சுனாமி காலனி, ராஜிவ் காந்தி மறுவாழ்வு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர், நடராஜ்-மாரியம்மாள் தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2வது மகளான அபிராமி (24), தூத்துக்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அபிராமிக்கும், அதே கம்பெனியில் வேன் ஓட்டுநராக வேலை செய்யும் செல்வம் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அபிராமியின் பெற்றோர் வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அதற்கும் அபிராமி சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தெரிந்து கொண்ட ஓட்டுநர் செல்வம், அபிராமியிடம், அவரது புகைப்படத்தை இணையதளத்தில் போட்டு விடுவதாகவும் அதனால் தன்னுடன் வர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அபிராமி திடீரென நேற்று மதியம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அபிராமி தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல பின்னர், தகவலறிந்து வந்த தாளமுத்துநகர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், போலீஸ் விசாரணையில் அபிராமி தற்கொலை செய்வதற்கான காரணத்தை கடிதத்தில் எழுதி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதில், “அப்பா, அம்மா நான் தப்பு பண்ணிட்டேன். அதனால அவன் என்னையே மிரட்டுரான். என்னுடைய போட்டோவை நெட்டில் போட்டு விடுவானாம். அதனால என்னை தனியா வா, இல்லன்னா உன்னைய போட்டுவிடுவேன் என்று சொல்லுகிறான். அதனால் நான் உங்களை விட்டுப் போகிறேன். என்னை மன்னிச்சிருங்க அப்பா, அம்மா. அவனை சும்மா விடாதீங்க அப்பா, அம்மா. நான் போறேன், என்னைய மன்னிச்சிடுங்க” என்றும், செல்வத்தின் செல்போன் நம்பரை மட்டும் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இது குறித்து அபிராமியின் பெரியப்பா மகள் வேலம்மாள் கூறுகையில், “தங்கை அபிராமி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் திருமணமான செல்வம் என்பவர் வேன் ஓட்டுநராக உள்ளார். முன்னதாகவே, இவர் என் தங்கை அபிராமியை மிரட்டியுள்ளார். இது சம்பந்தமாக போலீசாரிடம் கூறினோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அபிராமியின் இறப்புக்கு காரணமான செல்வம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தங்கையின் உடலை வாங்க மாட்டோம்” என்றார். மேலும், இது குறித்து தூத்துக்குடி டவுண் துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியராஜ் கூறுகையில், “பெண்ணின் கடிதத்தில் உள்ள அந்த செல்போன் எண்ணை வைத்து தனிப்படையினர் திருச்சி விரைந்துள்ளனர். அவரை கைது செய்த பின்னர்தான் முழு விவரங்கள் தெரிய வரும். கடிதத்தை அவர்தான் எழுதினாரா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க:ஆக்ராவில் ஹோட்டல் பணிப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது!